Tuesday, September 1, 2015

நானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....

என்ன கொடுமை சார் இது....

மேலை நாட்டில் அவனவன் வேலையை
செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்.....
..
கீழை நாட்டில் அவன் வேலையை விடுத்து
அபாயகரமான செயல் செய்ய லஞ்சம் வாங்குகிறான்...
..
பாழாய்ப்போன பாரதத்தில் தான் அவன் வேலையை அவன்
செய்யவே லஞ்சம் வாங்குகிறான்... என
எங்கோ படித்த ஞாபகம்....
...
அட அஞ்சு பத்து ... வாங்குவதற்கே .... பயந்து பயந்து
வாங்குறவங்க மத்தியில ....
கூசாம வெளிப்படையா ... 100 சதம் பணம் அதிகம் கேட்டு
வாங்கறாங்களேன்னு கோபபட்டா.... எதிர்த்து கேட்டா...
 நம்மளை பொழைக்க தெரியாதவன்னு முத்திரை குத்தறாங்க.....
உனக்கு இதே வேலையா போச்சுன்னு திட்டறாங்க....

சரிப்பா...
வம்பு வழக்கு இல்லாம ஒரு வேலை செய்யலாமுன்னு..
என்னோட கடைக்கு தனி EB லைன் எடுக்க... போனேன்...
மூனு மாசமா அதை கொண்டா...
இதை கொண்டா... அப்படி பண்ணு ... இப்படி பண்ணு...னு
சொல்லி ஒரு வழியா பணத்தை கட்டுங்க ...
லைன் கொடுத்தடலாமுன்னு நேத்து சொன்னாங்க...

எவ்வளவுன்னு கேட்டா ....
மூவாயிரம் ரூபான்னாங்க .....
அடிச்சு பிடிச்சு.... அடகு வச்சு ....நானும் கட்டினேன்....
இது போக ... லைன் மேனுக்கும் ....
போர் மேனுக்கும் தனியா அழுகனுமாம்...
பில்லு நாளைக்கு வாங்க ... வாங்கிக்கலாமுன்னாங்க....
அதுக்கும் சரின்னேன்..

இன்னைக்கு போனா....
50 ரூபாய்க்கு ஒன்னும் 1550 ரூபாக்கு ஒன்னும் கொடுத்தாங்க...
மீட்டர் வர ஒரு மாசம் ஆகும் ....
போனு பண்ணுவோம் .. அப்பறமா வாங்கன்னு சொன்னாங்க...
சரின்னு வந்துட்டேன்..... என்ன பண்ணறது...

லஞ்சம் கொடுத்தும் ஒரு மாசம் காத்திருக்கனுமாம்....
அப்பறம் என்னா டேஸுக்கு  அதிகமா பணம் வாங்கனும்...
அய்யய்யோ... நான் கோபபடல..சாரி....
.. சரி...சரி...விட்டுடலாம்....
நானும் பொழக்கனுமில்ல....
இப்பவாவது நான் நல்லவன்னு ஒத்துக்கங்க....
ஹய்யா.... 
நானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....
நானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....
...
ஒரு நிமிசம்...
என்னதுங்க.... எந்த ஆபிஸ்ங்களா....
திருப்பூர் தாராபுரம் ரோடுங்க....
அவங்க பேருங்களா....
எனக்கு தெரியலைங்க.....
என்னங்க...பணம் கேட்டதுக்கும், வாங்குனதுக்கும் ...அத்தாட்சியா....
இருக்குதுங்க... இருந்தும் என்ன பண்ண முடியுங்க.... 
அவங்க போன் நம்பர்ங்களா....
அது ...அது .....வந்து...
97894 84851...
AE-94458 51395 ... 
யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.......
அய்யய்யோ ... 
போனு கீனு பண்ணிடாதீங்க...
இப்படித்தான் ஆடு  வாங்க லோனு வாங்குனவரு...
லஞ்சம் தராததால.. அந்த ஆடு குட்டியே போடலையாம்....
....
அய்யோ  ... அய்யய்யோ ...
நான் எதுமே எதுத்து கேக்கலைங்க....
பணத்தை திருப்பி கொடுத்தா வாங்கிக்குவேன்னுங்க...
(ஏன்னா அடகு வச்ச நகையை மூட்டுடலாம் பாருங்க)
ஆனா கொடுக்கவா போறாங்க...
முதலை வாய்ல மாட்டுனா .. தப்ப முடியுமா...
அப்பறம் கொடுக்கலைனா...
கரண்ட் வராது... விட்டு விட்டு வரும்...
அப்பறம் அது சரியில்ல ... இது சரியில்லனு...
குத்தம் சொல்லுவாங்க.... நமக்கெதுக்கு வம்புங்க....
போனா போகட்டும் விடுங்க....


பிளாஸ் நீயூஸ்...
3.9.2015 காலை 10 மணியளவில்... 
மின் அலுவலக ஊழியர்கள் இருவர் நேரில் வந்து மீதம் 
பணம் ரூ.1400 ஐ  திருப்பி தந்து விட்டார்கள்...
அழைத்து பேசிய நண்பர்களுக்கு நன்றி...

எங்க வீட்டுக்கு மின் இணைப்பு வாங்கிய கதையை படிக்க...


Friday, August 7, 2015

லஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி?

திரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பதிவு செய்வது எப்படி ?. 2. பத்திர எழுத்தர் மூலமாக பத்திரம் எழுதும் போது எவ்வாறு லஞ்சம் தவிர்ப்பது ? 3. லஞ்சம் கொடுக்காமல் பத்திர பதிவு செய்யும் போது, நமக்கு பதிவு அலுவலகத்தில் ஏதேனும் இடையூறுகள், தடங்கல்கள் ஏற்படுமா ? 4. அவற்றை எப்படி சமாளிப்பது ? 5. வேறு முக்கிய விஷயங்கள் ஏதாவது உள்ளதா ?
என்பதையும் தெரியபடுத்துங்கள்..... நன்றி....

இது நண்பர் ஒருவரின் குறுஞ்செய்தியின் சாராம்சம்....

பலருக்கும் பயனுள்ள கேள்விகள் என்பதால் பதிவாக இங்கே...

முதலில் அனைவரும் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ளவும்..
ஆவணங்களை பதிவு செய்வது சார்பதிவாளர் மட்டுமே தான்...
 அவருக்கு தரகு வேலை செய்து கல்லா கட்டுவது தான்
இந்த ஆவண எழுத்தர்களின் பிரதான வேலை..

பதிவு செய்ய போகும் ஆவணங்களை ஆவண எழுத்தர் தான்
எழுத வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது....

ஆவணத்தை எழுதி கொடுப்பவர்கள் ( சொத்தை விற்பவர்கள்) மற்றும்
தகுதி வாய்ந்த வழக்குரைஞர்களும்    ஆவணங்களை எழுதலாம்..

ஆவண எழுத்தர்களுக்கு அனுபவங்கள் அதிகம் ஆகவே
அவர்களை நாடுகிறார்கள் நம் மக்கள் ...
அவர்களும் அடித்து விடுகிறார்கள்..
(ஆவணங்களை டைப் அடிப்பதை சொல்கிறேன்)

லஞ்சம் கொடுக்காமல் நீங்கள் பதிவு செய்ய நினைத்தால்....

1. நல்ல ஆவண எழுத்தர் ஒருவரை அணுகி தெளிவாக
”எனக்கு ஆவணங்களை தயார் செய்தால் போதும் நானே பதிவு
செய்து கொள்கிறேன்” எனக்கூறி அதன் சம்பந்தபட்ட நகல்களை
கொடுத்தால் அவர்கள் தயார் செய்து தருவார்கள்...
முதலிலேயே அவர்களுக்கான உண்டான கூலியை பேசிக்கொள்ளுங்கள்.
அரசு வழிகாட்டும் கூலியைதான் அவர்கள் வாங்க வேண்டும்...
உதாரணத்திற்கு ஒரு விற்பனை ஆவணம் என்றால் ரூ.50 மட்டுமே...
ஆனால் இது நடைமுறை சாத்தியமில்லை .ஆகவே நியாயமான முறையில்
இருதரப்பும் பேசி கூலியை நிர்ணயத்து கொள்ளவும்...

2.முதல் முறையாக இருப்பின் ஆவண எழுத்தரிடமே
நடைமுறைகளை பற்றியும், என்ன செய்ய வேண்டும் என்பதையும்
நட்பாக பேசி தெரிந்து கொள்ளுங்கள் ...

3.எவ்விதமான சந்தேகம் என்றாலும் சம்பந்தபட்ட சார்பதிவாளர்
உங்கள் சந்தேகம் தீர்வாகும் வரை விளக்க கடமைபட்டுள்ளார்
என்பதை மறவாதீர்கள்..

4.எவ்வளவு தொகைக்கு ஆவணங்கள் வாங்க வேண்டும் ..
எவ்வளவு தொகைக்கு வரைவோலை எடுக்க வேண்டும் என்பதையும்
ஆவண எழுத்தரிடமோ இல்லை சார்பதிவாளரை நேரில் அணுகியோ
தெரிந்து கொள்ளுங்கள்...

5. சார்பதிவாளர் ஏதேனும் சங்கடபட்டலோ எரிந்து விழுந்தாலோ...
ஆவண எழுத்தரிடம் கேட்க சொன்னாலோ...
அய்யா ... எந்தவிதமான புரோக்கர்களையும் அணுக நான் விருமப வில்லை
இந்த அலுவலகத்தின் அதிகாரி நீங்கள் தானே ...
என் சந்தேகங்களுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்... இல்லையென்றால்
தகுந்த அலுவலரை பதில் சொல்ல பணியுங்கள் என்று
மென்மையாக சொன்னால் உங்கள் வேலை சுமூகமாக முடியும்..

6.இது போலவே தான் வில்லங்க சான்றிதழ், சான்றிட்ட நகல், போன்ற
சார்பதிவாளர் அலுவலக வேலைகளையும் லஞ்சம் தராமல் உரிய
பணம் செலுத்தி பெறலாம்.

7.மக்கள் ஆட்சியில் மக்களே எஜமானர்கள் என்பதை மனதில் வைத்து
நம் செய்யும் செயல்கள் சட்டபடி இருந்தால்
லஞ்சம் கொடுக்காமல் எந்த செயலையும் செய்யலாம் ...

லஞ்சம் தவிர்.... நெஞ்சம் நிமிர்....


Wednesday, July 15, 2015

அம்மா உணவகம்

இன்றைய சைட் விசிட்...(15.07.2015)
திருப்பூர் அரசு மருத்துவமனை
 “அம்மா உணவகம்”...

காலை மணி 7.55...

மக்கள் கூட்டமே இல்லாமல் வெறிச்சென இருந்ததால்
செயல்படுகிறதா இல்லையா என்ற சந்தேகத்துடன்...
உள்ளே நுழைந்தால்...




அங்கொன்றும் இங்கொன்றுமாய் பதினொரு பேர்...
உணவருந்தி கொண்டிருந்தனர்...

சிறார் சட்டத்தில் திருத்தம் வந்ததாலோ என்னவோ...
ஒரு சின்ன பையன் சுறுசுறுப்பாக டோக்கன் கொடுத்து...
மீதி பணத்தை வேகமாக எண்ணி கொடுத்தான்...
ஏதோ முன்னூறு பேர் லைனில் நிற்பதாக நினைத்து...
(பின்னாடி நல்லா வருவான்)



பார்சல் கிடையாது என்று அறிவிப்பு பலகை இருந்தாலும்
மனிதாபிமானமா இல்லை மீதம் ஆகிடும் என்ற பயத்தாலோ 
ஜோராக பார்சல் வழங்கபட்டு கொண்டிருந்தது ...
வடநாட்டு  வாலிபர்கள் பார்சல் வாங்க...
தேவையான பாத்திரங்களுடன் வந்திருந்தார்கள்... 
(ரெகுலர் கஸ்டமர் போல)



அஞ்சு ரூபாய்க்கு அஞ்சு இட்லி வாங்கி அசைபோட்ட படியே
நோட்டமிட்டேன்...
நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும்.... உடன்
ஆட்டோ டிரைவர்களும் பசியாறினார்கள் ..
சாம்பார்  சூப்பர்...
இட்லிதான் கொஞ்சம் புளித்திருந்தது....
அப்படியே பிசைந்து உள்ளே இறக்கி பசியாறிய பின்...
சுத்தம் பற்றி ஞானம் வந்தது...

100 எழுமிச்சைகளின் சக்தி கொண்டு தட்டுகளை கழுவி.... பின்
குளிந்த நீர் .... வென்னீர் என மிக அருமையாக 
சுத்தமாக தட்டுகளை மட்டுமின்றி 
அனைத்து பாத்திரங்களையும் கழுவுகின்றனர்...

அரசு மருத்துவ மனை என்பதால் மட்டுமல்ல 
அனைத்து இடங்களிலும் இப்படித்தான் எனச்சொன்னார்கள்...
தினசரி ரூ.250 சம்பளம் வாங்கும்  மீனாட்சி சுய உதவி குழு பெண்கள்..

ஆனால் வந்து செல்லும் பொது மக்கள் செய்யும் 
அழிசட்டியங்களுக்கு  அளவே இல்லை...
ஆங்காங்கே வெற்றிலை.... பான்பராக் எச்சில்கள்....


கொள்கை ரீதியாக அம்மா உணவகங்கள் திட்டம் மீது 
வெறுப்பு இருந்தாலும் இது போன்ற 
அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்துவது வரவேற்கதக்கது..





Sunday, May 10, 2015

கல்வி பெறும் உரிமை.. கேட்டால் கிடைக்கும்

கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றி ...
எடுத்துக்கூறி ஏழை பெண் ஒருவரை
அவர் வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு...
RTE Act படி இவர்களுக்கு ஒரு விண்ணப்பம் வழங்கவும் என
கடிதம் கொடுத்தனுப்பினேன்...

யார் என்ன ஏது என விசாரித்து விட்டு...
என் கைப்பேசி எண்ணை வாங்கி அழைத்தார்...
அந்த தனியார் பள்ளி முதல்வர்..
எனக்கு வேலை கொஞ்சம் இருந்ததாலும் ...
புதிய எண்ணாக இருந்ததாலும்  கைப்பேசியை எடுக்கவில்லை ..

பள்ளி பெயரை குறிப்பிட்டு...
தான் பள்ளி முதல்வர் எனவும்
தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனவும் குறுஞ்செய்தி அனுப்பினார்...

தொடர்பு கொண்டேன்...
தங்கள் பள்ளி வளரும் பள்ளி எனவும்...
இது போன்ற சட்டங்களை பின்பற்றினால் .. நாங்கள்
பள்ளி நடத்துவது கடினம் எனவும் சொல்லி..
மேற்படி குழந்தைக்கு குறைந்த கட்டணமே
வசூலித்து கொள்கிறோம் .. என்றும் சொல்ல....
எனக்கு ஜிவ்வென்று ஏறியது.....

விண்ணப்பம் வழங்க முடியுமா முடியாதா...
முடியாதென்றால் சொல்லிவிடுங்கள் ..
நான் பார்த்துக்கொள்கிறேன்... என நான் சொல்ல...

உடனே அவர்
கட்டாய கல்வி சட்டத்தை அவர்கள் தாங்கி பிடிப்பது போல..
இந்த சட்டம் எஸ்சி..எஸ்டி-யினருக்கு மட்டுமே எனச்சொல்ல...
எழுத்துபூர்வமாக கொடுங்கள்  என நான் சொல்ல...
அந்நியன் போல மாறிவிட்டார்... அவர்..

நீங்கள் அனுப்பியவரை ..
கட்டாய கல்வி சட்டபடியே நாங்கள் சேர்த்துக்கொள்கிறோம்..
உடனே அவர்களை அனைத்து சான்றிதழ்களையும்
கொண்டு வந்து சேர சொல்லுங்கள் .. எனச்சொல்லி...
உங்களை நான் அவசியம் சந்திக்கனும் ...
பிரியா இருக்கும் போது வாங்கனு சொல்லி ...
வாயெல்லாம் பல்லாக அவர் சிரித்த சிரிப்பு ...
போனிலேயே எனக்கு தெரிந்தது...

கேட்டால் கிடைக்கும்





Thursday, March 19, 2015

புயலென புறப்படு என் தோழா......

மின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்...
17.03.2015 எனது முகநூல் பதிவை தொடர்ந்து 
உறவினர் வீட்டு மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய 
வேண்டும் எனக்கேட்டு வந்திருந்தார்...இன்று (19.03.2015)

தேவையான ஆவணங்களை இணைத்து 
விண்ணப்பம் எழுதி
திருப்பூர் குமார் நகரில் உள்ள
“செயற்பொறியாளர்” அலுவலகத்திற்கு அனுப்பினேன்...
ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்
1.மூலபத்திரம் 
2.வி.ஒ.ஏ சான்று...
3. பத்திரத்தில் பிழை உள்ளது அதை திருத்தி புது பத்திரம்... ஆகியன
கொண்டு வரவும் என திருப்பி அனுப்பி விட்டார்கள்...

(பத்து வருடங்களுக்கு முன் இவர்கள் சொத்து வாங்கும் போது 
ஆவணத்தில் மின் இணைப்பை பற்றி குறிப்பிடவில்லை)...

விவரம் தெரிந்த நண்பர்களை தொடர்பு கொண்டு ...
விசாரித்து இணையம் மூலம் மின் ஒழுங்கு முறை ஆணைய
இணைய பக்கத்தில் “பெயர் மாற்றம்” செய்ய விண்ணப்பிக்க
தேவையான ஆவணங்கள் பற்றி தேடி நகலெடுத்தேன்....

இந்த அறிவிப்பின் மூலம்...சொத்து ஆவண நகல்..... அல்லது 
தகுந்த அதிகரியின் சான்றொப்பமிட்ட ....
 வீட்டு வரி ரசீது,தண்ணீர் கட்டண ரசீதுகளில் 
ஏதேனும் ஒன்று .... அல்லது ... வட்டாட்சியர் சான்று ..  
இவற்றில் ஏதேனும் ஒரு நகல் போதும்....

யோசித்தேன் .... நமக்கு வேலை உடனே ஆகனும்... .
நேராக பெரிச்சிபாளையம் மாநகராட்சி பள்ளிக்கு சென்று 
தலைமை ஆசிரியையிடம் உதவி கேட்டேன்...

“நீங்கள் மக்களுக்காக உதவி செய்கிறீர்கள்”
என்னால் ஆனதை உங்களுக்கு செய்கிறேன்...  எனச் சொல்லி
வீட்டு வரி ரசீது நகலில் சான்றொப்பமிட்டு தந்தார்... 
நன்றி சொல்லி விடை பெற்று நேராக ”செயற்பொறியாளர்” 
அலுவலகம் நோக்கி படையெடுத்தேன் “என் ஆயுதங்களுடன்”
...(போருக்கு கொண்டு சென்ற ஆயுதங்கள் பற்றி கடைசியில்)

அங்கே..
ஏற்கனவே திருப்பி அனுப்பிய அதிகாரி...
“ஏம்மா உங்களை தான் அப்பவே அனுப்பிட்டேனே மறுபடியும் 
எதற்கு வந்தீங்க”னு கேட்க....
அய்யா ஒரு நிமிடம்...னு நான் இடைமறித்து ...
விண்ணப்பத்தை நீட்டினேன்.... 
எல்லோருக்கும் சொல்லும் பல்லவியே பாடினார்...
அது வேண்டும்.... இது வேண்டும்...
. இதுவும் அதுவும் வேண்டும் என... சொல்லி...
மற்றவர்கள் விண்ணப்பத்தை காட்டி ... பாருங்கள்
எல்லோரும் கொடுத்திருக்கிறார்கள் ....
 நீங்களும் கொண்டு வாருங்கள்.... என்றார்...
நானோ “மற்றவர்கள் கொடுத்த ஆவணங்கள் பற்றி எனக்கு தெரியாது....
நாங்கள் என்ன கொடுக்க வேண்டும் என்பதை சொல்லுங்கள்....
எனக்கு மறந்து போகும் அய்யா ... ஆகவே எழுதி கொடுங்கள் என்றேன்....

அவரும் அக்கறையாக பேப்பரும் பேனாவும் எடுத்தார்... உடனே
நான் எழுதி உங்கள் பெயர் பதவியுடன் கூடிய அச்சு பதிந்து 
கையொப்பமிட்டு தாருங்கள் ... என கேட்டேன்... 
சுதாரித்த அவர்....
மேலதிகாரியை கை காட்டினார்.....

அவரிடம் சென்று சுருக்கமாக விபரம் சொல்லி ....
அவரும் ஆவணங்களை கேட்ட போது...
இணையத்தில் இருந்து எடுக்கபட்ட நகலை காண்பித்து 
இதில் குறிப்பிட்டபடி ஆவணங்கள் இணைத்துள்ளேன் ... 
அப்பறம் என்னங்க அய்யா.... என்றதும் ....
 முப்பது நொடிகள் மெளனத்திற்கு பிறகு ....
 அவர் பேனாவால் ஏதோ கிறுக்கி
பழைய அலுவலரிடமே அனுப்பினார்...

அதை பார்த்ததும் அவரின் உபசரிப்புக்கு அளவே இல்லை...
காத்திருந்த அனைவரையும் தவிர்த்து ...
முழுக்க முழுக்க அனைத்து வேலைகளையும் முடித்து...
முறைபடி கட்ட வேண்டிய பணத்தையும் அவரே வாங்கி 
செலுத்தி ரசீதும் பெற்று தந்து .... அனுப்பி வைத்தார்...

ஒரே ஒரு வீட்டு வரி ரசீது நகலில் முடிக்க வேண்டிய
வேலையை ... அங்கிருந்த ( அலுவல் நடைமுறை தெரியாத) அதிகாரிகளால்
மக்கள் அல்லோகலபடுவதை நினைத்து பெருமூச்சிட்டபடியே....
உதவிய உள்ளங்களுக்கு நன்றி சொல்லி கிளம்பினோம்....

அந்த ஆயுதங்கள்...
ஆம் ஆத்மி தொப்பியும் ...
சட்டையில் குத்தும் AAP பேட்சும்....










Tuesday, February 17, 2015

கேட்டால் கிடைக்கும்

தலைநகர் டில்லியில்....
5.2.2015....
டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ...
ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில்
சாப்பிட சென்றேன் நண்பருடன்....
அது ஒரு சுய சேவை உணவகம்...
பணம் தந்து பில் போட்டு பின் உணவை வாங்கி
ஓரமா நின்னு சாப்பிடனும்ங்கறது அந்த விடுதியின் விதி....


மொழிபுரியாமல் .... ஏதோ ஏதோ பேசி....
ஏதோ வாயில் நுழையாத அய்யட்டங்கள்
ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு ....
தண்ணீர் கேட்டேன்...
வந்ததே வினை....

அங்கிருந்த அழகு மயில் வடமொழியில் சிரித்துக்கொண்டே...
கல்லா பொட்டியை கைகாட்டி ஏதோ கதைத்தது.....

கல்லா பொட்டியை கவனித்து கொண்டிருந்த ...
கல்லூரி மாணவன் போலிருந்த ஒருவன்..
...
என்னிடம் வா .... பணம் கொடு ... ரசீது தருகிறேன்...
அப்பறம் போய் ரசீதை கொடுத்து ....
தண்ணீர் வாங்கி குடி...
அது வரைக்கும் விக்கல் எடுக்கட்டும் ... என்று
அவன் மொழியில்  அவன் சொல்வது எனக்கு புரிந்தது....

என்னடா இது சோதனை...
தமிழில் பேசினாலே தொண்டை வரண்டு போகுமளவிற்கு...
கத்தி பின் தண்ணி வாங்கி குடிக்கனும்...
இதென்னடா வம்பா போச்சே....

சும்மாவே ......
நாமொன்னு சொல்ல அவங்க ஒன்னு புரிஞ்சுக்கறாங்க....
இதுல எங்க போய் சண்டை போட்டு தண்ணீர் வாங்கறதுன்னு
நினைச்சாலும்.... முடிந்தளவு...
காசு கொடுத்து தண்ணீர் வாங்குவதில்லை என்ற
கொள்கை பிடிப்பை கைவிட மனதில்லாமல்....

“மேம்...
யூ நவ் சுப்ரீம் கோர்ட் ஆர்டர் இன் நைண்டீன் நைண்ட்டீ எய்ட்...
எனி  ரெஸ்டாரண்ட், ஹோட்டல்ஸ் ஆர் புட் கோர்ட்
கம்பள்சரி  பிரி டிரிங்கிங் வாட்டர் சர்வீஸ்” .... என
எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அடிச்சு விட்டேன்....

சண்டை போடும் விதத்தில் கோபமாக நான் பேசியும்
முன்பை விட அழகாக சிரித்து கொண்டே அந்த பைங்கிளி
பைசா கட்டிட்டு வா ... பானி தருகிறேன் என
பழைய பல்லவியே வாசித்தது ....

“மேம் யூ அண்டர் ஸ்டேண்டிங் மை பிராப்ளம்” என கேட்டதும் தான்
புரிந்தது  எனக்கெப்படி தமிழ் மட்டும் தெரியுமோ.... அது போல
அதற்கு ஹிந்தி மட்டுமே தெரியும் போல...

தூரத்தில் இருந்து கவனித்து கொண்டிருந்த...
 கல்லா பெட்டி கதாநாயகன்...
ஓடி வந்து அந்த குளிர் நேரத்திலும்....
குளு குளுன்னு புது தண்ணீ பாட்டில் கொடுத்து புன்னகைத்தான்...
நன்றி சொல்லி தாகம் தணித்தோம்....

போராடி குடித்த தண்ணீர்....
மனதிற்கினிதாக ”சிறுவானி” தண்ணீரை விட
அருமையாக இருந்தது ....

அப்போது தான் புரிந்தது...
போராடி கிடைக்கும் தண்ணீரின் சுவை....

ஆகவே தான் சொல்கிறோம் ....
கேளுங்கள் கொடுக்கப்படும்....

Sunday, January 25, 2015

அரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..

நேற்று மாலை
அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில்
திருமணம் நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுக்க
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள
அலுவலகத்திற்கு சென்றேன்...

அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்பு...
.திருமணகட்டணம் ரூ.1000 கேட்டார் ...
கொழு பொம்மை போல் அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர்.

சில நாட்களுக்கு முன்பு சிவன்மலை கோவிலில்
நடந்த உறவினர் திருமணத்திற்கே
திருமண கட்டணம் ரூ.250 தான் கொடுத்திருந்தது
நினைவிற்கு வர.... சிவன்மலையில் நடந்த கதையை படிக்க...

நான் திருமணகட்டணம் குறைவாகத்தானே இருந்தது எனக்கேட்க..
அப்படியெல்லாம் இல்லை ரூ 1000 கட்டினால் கட்டுங்கள்
இல்லைனா நடையை கட்டுங்கள்” என்றார்

என்னுடைய இயல்புக்கு மாறாக சாந்தமாக....
இவர்கள் வசதியில்லாதவர்கள்....
ஏழைகளுக்கென்று கட்டணம் குறைவாக ஏதும் உள்ளதா..
எனக்கேட்டேன்...

1000 ரூபா கூட கட்ட முடியாதவங்க
கல்யாணம் பண்ணி எப்படி குடும்பம் நடத்துவாங்க ...
ஒரு பொண்ணை வச்சு எப்படி காப்பாத்துவாங்க......னு கேட்க...
என்னுள் இருந்த சாந்த மூர்த்தி  ருத்திர மூர்த்தியானார் .....

”ஒரு பொண்ணை வச்சு குடும்பம் நடத்த.....
1000 ரூபா தேவையில்லை.........(............)
ஆம்பளையா இருந்தா போதும்”
ஆனா உங்களை மாதரி பொண்ணை கட்டுன
தினம் 10000  சம்பாரிச்சாலும் பத்தாது’னு சொல்ல...
சிவப்பாக இருந்த அவரது முகம் மேலும் சிவந்தது....

அவருக்கு ஆதரவா பக்தி பழம் போலிருந்த இன்னொரு ஊழியர்
... உங்களுக்கு விருப்பமிருந்தா பணத்தை கட்டுங்க...இல்லைனா
எங்கோ போய் திருமணத்தை நடத்துங்கள்....”
“எங்கள் கோவிலுக்கு எதற்கு வருகிறீர்கள்....
நாங்களா வரச்சொன்னோம்” எனச்சொல்ல....
..
உன் அப்பன்.பாட்டன் வீட்டு...சொத்தா இந்த கோயில்....
பக்தர்கள் போடும் காணிக்கை காசில் சம்பளம் வாங்கி
வயிறு வளர்க்கும் உங்களுக்கு இவ்வளவு திமிரென்றால்
உங்களுக்கு மட்டுமல்லாமல் .....
வாசலில் இருப்பவர்களுக்கும் சேர்த்து
பிச்சை போடும் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்” என்று சொல்லி
பெரிய ருத்தர தாண்டவமே ஆடிவிட்டு.......

நேராக அறநிலையத்துறை உதவி ஆணையரை
சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றேன்...

அந்த அலுவலக உதவியாளர்களிடம் பிரச்சனையை சொன்னதும்
உதவி ஆணையாளர் தேக்கடி முகாமுக்கு சென்றிருப்பதாகவும்
அடுத்த வாரம் வந்து புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர்...

அடுத்த வாரம் வரை ஆறப்போட மனம் இடம் தராததால்
இருக்கவே இருக்கு நம்ம முதல்வர் தனிப்பிரிவு என ...
பைசா செலவில்லாமல் புகாரை தட்டி விட்டாச்சு....
பார்ப்போம் என்ன நடக்குமென்று....