Wednesday, August 6, 2008

திருப்பூரும், எதிர்பார்ப்பும்

veyilaan
திருப்பூரிலிருந்து எப்போது ஊருக்கு போனாலும், எதிர்படும், பார்க்கும், பேசும் அனைவரும் நலன் விசாரித்தலும், என் உடல் நீள, அகலங்கள் பற்றி கருத்து கந்தசாமியாகி கருத்து சொல்லலும், எப்போதோ, தினசரியில் படித்த ஒரு திருப்பூர் பற்றிய மிகப்பழைய செய்தி பற்றி விசாரித்தலுக்கு பிறகு, கேட்க ஆரம்பிக்கும் ஒரே விசயம் டி சர்ட், பனியன், ஜட்டி தான் (அடப்பாவிகளா! இதுக்கு தான் இவ்வளவு அக்கறையா விசாரிச்சிங்களாடா?).

ஏதோ, திருப்பூரில் சாலையில் இருபுறமும் இறைந்து கிடக்கும். இல்லையென்றால், கிலோவுக்கு பத்து டி சர்ட் கிடைக்குமென்று எந்த புண்ணியவானோ, சொல்லி விட்டிருக்கிறான் போலும். நான் ஊருக்கு போகுமுன்னேயே என் வீட்டில் முன்பதிவுகள் வேறு. இதற்கு என் பெற்றோரிடமிருந்து சில, பல பரிந்துரைகளோடு கோரிக்கைகள்.
இது என் நண்பன்….
”டேய், அடுத்த தடவை வரும் போது எனக்கு நாலு டி சர்ட் மட்டும்(?!) வாங்கிட்டு வாடா. வந்து காசு வேணும்னாலும்?! (என்ன ஒரு தாராள மனசு) வாங்கிக்கோ (ஏதோ போனா போகுது). புள்ளைகளுக்கு கூட நல்ல நல்லதா இருக்காமே, வரும் போது வாங்கிட்டு வாடா.“
என் புள்ளைங்கட்ட கூட சொல்லியிருக்கேன், மாமா வந்தா வாங்கிட்டு வருவார்டானு! (எங்க கொண்டு போய் கோர்த்து விடுறாங்ங பாருங்க! அவன் வீட்டுப் பக்கம் தலை வச்சு படுப்பேனா இவ்வளவு சொன்ன பிறகு)
என் சொந்தக்காரன் கூட ஒருத்தன் இருக்காண்டா, (எவனுக்குத்தான் இல்லை? தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாருக்கும் திருப்பூர்ல ஒரு சொந்தக்காரன் இருப்பான்) அவங்கிட்ட கூட சொல்லாம உன்ட்ட ஏன் சொல்றேன். சொன்னா செய்வேன்னு சொல்லித்தான் (ஏன் இளிச்சவாயன்னு எழுதி ஒட்டியிருக்கா?).
ஒவ்வொரு தடவை ஊருக்கு போகும் போதும், எனக்கான உடைகளை விட நான் எடுத்துப்போய் கொடுக்க வேண்டிய ஆடைகள் அதிகம். எனக்கான எதிர்பார்ப்புகளை விட என் பையின் உள்ளிருப்பவைகளைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. முன்பாவது பனியன் தொழிற்சாலையில் பணிபுரியும் போது அங்கிருக்கும் மீத ஆடைகளை எடுத்துப் போகலாம். ஆனால் இப்போது முடியாது. ஆடைகள் வாங்குவதற்கென்று கணிசமான தொகை செலவாகிறது.
ஏம்பா கண்ணுகளா! திருப்பூர் பொழைப்பை பற்றி உங்களுக்கு தெரியாது. இங்க தன்னால நாய் பொழைப்பு பொழச்சிட்டிருக்கோம். பாக்குறதுக்கு பள பளன்னு தான் தெரியும். ஆனா, பட்டுப்பூச்சி மாதிரி சிக்கி சின்னாபின்னமாயிட்டிருக்கோம்னு உங்களுக்கு எப்படி தெரியும்?
என் நெருங்கிய உறவினர் கனடாவிலிருந்து வரும் போது, எனக்கு என்ன வாங்கி வருவது என கேட்டிருக்கிறார்? மேற்சொன்ன காரணத்தினாலே ஞானோதயம் பெற்ற நான், ஒன்றும் வாங்கி வரவேண்டாம் என மறுத்து விடுவேன்.
எல்லா இடத்துலேயும் இருக்கிறவங்களை விட திருப்பூர்ல இருக்கிறவங்களுக்கு ஆயுட்காலம் குறைவு. எந்த வேலை எடுத்தாலும் அவசரம்! அவசரம்! தான். மன அழுத்தம், தூக்கமின்மை, காலநேரமில்லா உழைப்பு.

காலையில எந்திரிச்சு, ‘அளவு’ தண்ணீரில் ‘அனைத்தையும்’ முடித்து விட்டு, (தண்ணீர் நிறைய செலவு பண்ணினா, வாடகை வீட்டை காலி பண்ணச்சொல்லிருவாங்ங. வீட்டை வாடகைக்கு விடுறவங்களப் பத்தி ஒரு தனி பதிவு போடற அளவுக்கு விசயமிருக்கு).
நான் முன்னால் தங்கியிருந்த ஒரு அறை என்ற பெயருடைய இடத்திற்கு ரூ.600/- மாதவாடகை. அறையின் அளவு – ஒரு பாய் விரிக்கும் அளவு (ஆழியூரான் கவனிக்க!). காலைக்கடன் கழிப்பதற்கு வரிசை மற்றும் ஒரு சின்ன வாளி தண்ணீர். சுத்தம் செய்வததற்கு இன்னொரு வாளி தண்ணீர். குளிப்பதற்கு ஒரு பெரிய வாளி தண்ணீர். அதற்குள் உள்ளாடை, துண்டு, உடம்பு அனைத்தையும் நனைத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் நிறைய செலவழிக்கிற வீட்டுல காசு தங்காது (உங்களை எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது) என்ற சமாளிப்புகள் வேறு. திருப்பூர் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அரசு எத்தனை திட்டங்கள் போட்டும், தண்ணீர் கொடுக்க மனம் வராது வீட்டு உரிமையாளர்களுக்கு. தனி சட்டம் தான் போட வேண்டும்.

எல்லாம் முடிஞ்சு வேலை செய்யுற எடத்துக்கு போய் சேர்றதுக்குள்ள படுற பாடு இருக்கே. போக்குவரத்து நெரிசல், வாகனப்புகை, தூசுப்படலம் இத்தனையும் தாண்டி போனா, போன உடனே ஏதோ ஒரு பிரச்சனை குத்த வச்சு உக்காந்திருக்கும் நமக்காக. சரி, அத முடிக்கலாம்னு பார்த்தா, இன்னோன்ன தொணைக்கு கூட்டிட்டு வரும். இதற்கிடையில் ஏகப்பட்ட தொலைபேசி உள், வெளி அழைப்புகள் வேறு. பெரும்பாலும் நடுநிசி அல்லது அதற்கு மேலும் வேலை இருக்கும்.
தண்ணீர், தேநீர், இயற்கை உபாதைகள் அனைத்தும் நேரத்துக்கு முடியாது. குறைந்தது மூன்று மணிக்கு மேல் மதியஉணவு என்பதையே நினைத்து பார்க்க முடியும். இரவு உணவு எத்தனை மணி என்று கணக்கே கிடையாது. ஆனால் காலையில் சரியான் நேரத்துக்கு இருக்க வேண்டும்.
நாங்களெல்லாம் சிரமப்படாமலா வேலை செய்றோம்?னு நீங்க கேட்க நினைக்கிறீங்க. புரியுது! புரியுது! ஆனா திருப்பூர்ல வேலை பாக்கிறவங்கள மாதிரி கிடையாது.
பனியன் தொழிற்சாலைகளுக்குள் வேலை செய்பவர்களுக்கு பனியன் துணிகளை வெட்டும் போது பறக்கும் பொடி தூசுகளினாலும், மற்றவர்களுக்கு சாலையில் பறக்கும் மண் தூசிகளினாலும் மூக்கடைப்பு பிரச்சனை அடிக்கடி வரும்.

பனியன் தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த இடங்கள் அனைத்தும் வெப்பமாய் இருக்கும். இரவு படுக்கும்போது நிச்சயம் இலகுவாக சிறுநீர் கழிக்க சிரமப்பட வேண்டியிருக்கும்.
கழிவு வேதி கனிமங்கள் கலந்த நீரை (பெரும் பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கிறது) உபயோகப்படுத்துவதால் அரிப்பு, ஒவ்வாமை போன்ற தோல் வியாதிகள் வரும்.
இயற்கை மற்றும் செயற்கை மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில், இருசக்கர வாகன வித்தை செய்வதால் முதுகு வலி ஒன்றிரண்டு வருடங்களில் நிச்சயம்.
நீங்கள் எங்காவது சாலையின் இடது பக்கம் ஒரு வாகனத்தை முந்தி செல்லும் வாகன ஓட்டியை (ஆட்டோ,வேன்,லாரி,பேருந்து ஓட்டிகளும் கூட) பிடித்து விசாரித்தால், அவர் நிச்சயம் திருப்பூரில் வண்டி ஓட்டியவராயிருப்பார். டி.வி.எஸ் 50 என்ற வாகனம் அதன் தயாரிப்பு நிறுவனம் நிர்ணயித்த ஆயுட்காலங்களையெல்லாம் கடந்திருக்கும். அந்த வண்டியை அவர்களே ஆச்சரியப்படும் வேகத்தில் ஓட்டுவார்கள். முக்கியமான விசயம் பெரும்பாலான வண்டிகளில் நிறுத்து விசை சரியாக வேலை செய்யாது.
சாலை விதிகளை ஒருவரும் மதிப்பதே கிடையாது (உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தில் பேருந்தின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் செல்கின்றன).

மாதச் சம்பளம் வாங்குபவர்களின் பொருளாதாரத்திற்கேற்ற உணவகங்கள் கிடையாது. சுவையான உணவு சுகாதாரமற்ற நடைபாதைக் கடைகளில் இரவு மட்டும் கிடைக்கும். மழை நாட்களில் அதுவும் கிடையாது. மதுரையில் கிடைப்பது மாதிரி சூடான, சுவையான இட்லி கிடைப்பது அரிதிலும் அரிது. இங்கு ‘குஷ்பு இட்லி’ என்ற பெயரில் பெரிய வெள்ளை பணியாரம் மட்டுமே கிடைக்கும். பெரிய உணவகங்களில் சுவையான உணவிற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.

மற்ற ஊர்களைக் காட்டிலும் காய்கறி, மளிகை, மாமிச உணவு பொருட்களின் விலை மிக அதிகம். ஏன் பிரபல பால் பை நிறுவனங்கள் (ஆரோக்யா) கூட திருப்பூருக்கு கூடுதலாக தனி விலை நிர்ணயித்திருக்கின்றன.
தேநீர் நிலையங்களுக்கு பஞ்சமில்லை. மூலைக்கு மூலை கேரளத்திலிருந்து சேட்டன்மார்கள் சகோதரர்கள், உறவினர்கள் சகிதம் இங்கு வந்து ‘பேக்கரி’ என்ற பெயரில் டீ கடை வைத்து சுடுதண்ணியில், அளவுக்கதிகமான சர்க்கரை போட்டு கலக்கி கொடுத்து பண்ணும் டீக்கொடுமையில், உடலின் சர்க்கரை அளவு கணிசமாக ஏறிவிடும்.

ஞாயிறு மட்டும் விடுமுறை. சில வாரங்களில் அதற்கும் ஆப்பு. பொழுது போக்குவதற்கென்று திரையரங்குகளும், ஆன்மீக ஆலயங்களும், அரசு ஆலயங்களும் மட்டும் தான். விடுமுறை நாட்களில் திரையரங்குகளின் பக்கமே செல்ல முடியாது.

இவ்வளவு சிரமங்களுக்கிடையில் வேலை செய்ய வேண்டுமா? என்ற கேள்வி உங்களுக்கு தோன்றும். அதற்கு பதில் – மலிந்து கிடக்கும் வேலை வாய்ப்பு மற்றும் உழைப்புக்கேற்ற ஊதியம்.
என் உறவினர் கனடாவிலிருந்து நான் எதுவும் கேட்காமலேயே எனக்காக ஒன்று வாங்கி வந்திருந்தார். அது என்னவென்று தெரியவேண்டுமென்றால் இதை அமுக்குங்கள்.
படங்களுக்கு நன்றி (Thanks for the photos) - திருப்பூருக்கு வருகை தந்த ஒரு சப்பானிய சீமான்
அனுபவம்

Monday, August 4, 2008

குசேலன் புறக்கணியுங்கள்!!!

"ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்

"ரஜினி ஒரு சந்தர்ப்பவாதிதான் பிழைக்க தமிழ் ரசிகர்களை சுரண்டி பிழைத்ததெல்லாம் மறந்து விட்டாயா? அல்லது ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின் பொழுது நீ உணர்ச்சி பொங்க நடித்து தமிழனை ஏமாற்றினாயே! அதுவும் மறந்து விட்டதா?...
"ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்"

திரைப்பட வெளியீட்டிற்கும் தன் குடும்பத்தை மறந்து, தன் குழந்தைக்கு குடிக்க கஞ்சியில்லாத போதும் உன்னுடைய கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணியவன் உன்னுடைய பாழாய் போன தமிழ் ரசிகன்.

தமிழ் நாட்டில் சம்பாதிதத்தை எல்லாம் கர்நாடகாவில் முதலீடு செய்த உன்னை தான் தமிழ் ரசிகன் முழு முதற் கடவுளாய் பார்க்கிறான்.காலத்திற்கு தகுந்தாற் போல் மாறுவது பெரிய மனிதனுக்கு அழகா?. என்றும் ஒரே பேச்சு பேசுபவன் தான் பெரிய மனிதன்.
தமிழ் நாட்டு ரசிகன் முன்பு "தமிழன்" என்று கூறியே பல கோடிகளை சம்பாதித்து, இன்று கன்னட அமைப்புகள் முன்பு கன்னடத்திலேயே மன்னிப்பு கேட்ட மானங்கெட்டவனின் மதி கெட்ட பேச்சுகள் சில...

1995 - பாட்சா: இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை...அன்பால தானா சேர்ந்த கூட்டம்....!

2007 - சிவாஜி:பன்னிங்கதான் கூட்டமா வரும்....!

1996 - சட்டசபை தேர்தல்:ஜெயலலிதாக்கு ஒட்டு போட்டா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது....!

2004 - மக்களவை தேர்தல்:சகோதரி ஜெயலலிதா ஆதரவு பெற்ற கட்சிக்கு ஒட்டு போட்டேன்....!
சகோதரி ஜெயலலிதா ஒரு தைரியலக்ஷ்மி....!

2008 - ஒகேனக்கல் உண்ணாவிரதம்:நம்ம உரிமைய தடுக்குறவங்கள உதைக்க வேண்டாமா?

2008 -குசேலன்:அய்யா மன்னிச்சுடுங்க.....என் தப்பை உணர்ந்துட்டேன்....தயவு செய்ஞ்சு என் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க.....!

ஐய்யா....அம்மா....!தமிழா!! மாற்றானுக்கு மண்டியிட்டது போதும்... ஆண்டாண்டு காலமாக திரையுலகினற்கு நீ தீப்பந்தமாய் இருந்தது போதும்..இளிச்சவாய் தமிழனே, இனியாவது விழித்துக்கொள்!மானமுள்ள தமிழர் யாவரும் இந்த குசேலன் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதை புறக்கணியுங்கள்!...

Sunday, August 3, 2008

கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா?

இந்தக் கதையை பொதுவாகவும் திருவள்ளுவர் மனைவியோடு இணத்தும் சொல்வார்கள். கொங்கணவ முனிவர் காட்டில் செல்கையில் அவர் மீது ஒரு கொக்கு எச்சமிட்டுவிட்டது. அவர் கோபத்தோடு மேலே நிமிர்ந்து பார்த்தார். அவரது தவ வலிமையில் கொக்கு எரிந்து சாம்பலாகிவிட்டது. அவர் திருவள்ளுவர் வீட்டுக்கு பிச்சை கேட்டு வந்தார். நெடு நேரமாகியும் வள்ளுவர் மனைவி பிச்சை போட வரவில்லை. அவர் கணவருக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தார். பின்னர் வெளியே பிச்சை போட வந்த போது கொங்கணவ முனிவர் அதே கோபத்தோடு வள்ளுவர் மனைவியயைப்பார்த்தார். ஆனால் அவரது கோபம் வள்ளுவர் மனைவியை எரிக்கவில்லை. அதுமட்டுமல்ல , வள்ளுவர் மனைவி சிரித்துக்கொண்டே கொக்கு என்று நினத்தாயோ கொங்கணவா என்று கேட்டாராம். பத்தினிப் பெண்களுக்கு முக்காலமும் உணரும் சக்தி உண்டு என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது. முனிவர் தன்னுடையதவ வலிமையை விட கடைமையைச் செய்யும் பெண்ணுடைய தவ வலிமை பெரியது என்பதை உணர்ந்தார்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

எல்லா நண்பர்களுக்கும்,
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
சூப்பர்ரப்பூ